Wednesday, February 19, 2014

எலும்பு மஜ்ஜை மாற்றப்பட்ட இருவருக்கு HIV முற்றாக நீங்கிய அதிசயம்!

Like
0



அமெரிக்காவில் பலகாலமாக ஹெச்.ஐ.வி. தொற்று இருந்தவர்கள் இரண்டு பேருக்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் உடலில் இருந்து இக்கிருமி நீங்கிவிட்டதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஹெச்.ஐ.வி. கிருமையை கட்டுக்குள் வைத்திருப்பதற்காக அவர்கள் சாப்பிட்டுவந்த ஆண்ட்டி ரெட்ரோ வைரல் மருந்துகளும் அவர்களுக்கு நிறுத்தப்பட்டுவிட்டது.
ஆனாலும் இவர்களுக்கு ஹெ.ஐ.வி. தொற்று குணமாகிவிட்டது என்று அவசரப்பட்டுக் கூற முடியாது என்றும், ஏனெனில் இவர்களது உடலில் இக்கிருமி எந்த ஒரு கட்டத்திலும் திரும்பி வரலாம் என்றும் இவர்களுக்கு சிகிச்சை அளித்துவருகின்ற பிரிகம் அண்ட் விமன் மருத்துவமனை கூறுகிறது.
சர்வதேச எய்ட்ஸ் சங்க மாநாட்டில் இந்த முன்னேற்றத்தின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஹெச்.ஐ.வி. கிருமித் தொற்று என்பது மனிதனின் மரபணுத் தொகுதிக்குள்ளேயே சென்று ஒளிந்துகொள்கிறது. ஆகவே மருந்துகளால் ஒன்றும் செய்ய முடியாத இடங்களை இந்தக் கிருமி தனது உற்றுக் கண்களாக ஆக்கிக்கொள்கிறது.
ரத்த ஓட்டத்தில் இருக்கக்கூடிய ஹெச்.ஐ.வி. கிருமிகளை கட்டுக்குள் வைத்துக்கொள்ள ஆண்டி ரெட்ரோ வைரல் மருந்துகள் உதவுகின்றன.
தொற்றுள்ளவர் இந்த மருந்துகளை எடுத்துக்கொள்வதை நிறுத்தினால், அவருக்கு கிருமியின் பாதிப்புகள் மீண்டும் ஏற்படத் துவங்கும்.
அமெரிக்காவில் எலும்பு மஜ்ஜை மாற்றப்பட்டுள்ள இரண்டு ஆண்களுமே கடந்த முப்பது வருடங்களாக ஹெச்.ஐ.வி. கிருமித் தொற்று உள்ளவர்கள்.
இவர்கள் இருவருக்குமே லிம்ஃபோமா வகைப் புற்றுநோய் வந்ததால், அவர்களுக்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை தேவைப்பட்டது.
இரத்த அணுக்கள் உற்பத்தி ஆகும் இடம் எலும்பு மஜ்ஜை ஆகும். எலும்பு மஜ்ஜையில் ஹெச்.ஐ.வி. கிருமிகள் பெருமளவில் செறிந்திருப்பதாகவும் கருதப்படுகிறது.
குறிப்பிட்ட இந்த இருவருக்கும் எலும்பு மஜ்ஜை மாற்றப்பட்ட பிறகு அவர்களது ரத்தத்தைப் பரிசோதித்ததில் அதில் ஹெச்.ஐ.வி. கிருமி எதுவும் தென்படவில்லை.
ஒருவருக்கு இரண்டு வருட மாகவும் மற்றவருக்கு நான்கு வருடமாகவும் ரத்தத்தில் ஹெச்.ஐ.வி. கிருமிகள் காணப்படவில்லை.
இவர்கள் இருவருக்கும் ஆண்டி ரெட்ரோ வைரல் மருந்துகள் கொடுப்பது இவ்வாண்டில் முன்னதாக நிறுத்தப்பட்டது.
ஒருவர் இந்த மருந்துகளை உட்கொள்வதை நிறுத்தி 15 வாரங்கள் ஆகியும் இன்னொருவருக்கு 7 வாரங்கள் கழிந்தும் இன்னும் அவர்களது ரத்தத்தில் ஹெச்.ஐ.வி. கிருமி தென்படவில்லை என்பது ஊக்கமளிக்கிற செய்தியாக வந்துள்ளது.
ஆனாலும் இந்த முடிவால் ஹெச்.ஐ.வி.யை குணப்படுத்தும் சிகிச்சை முறை கண்டுபிடிக்கப்பட்டதாக கூறிவிட முடியாது.
எலும்பு மஜ்ஜை மாற்றுவதால் ஹெச்.ஐ.வி. நீங்குகிறது என்றாலும்கூட எல்லோருக்கும் செய்ய முடியாத மிகவும் அதிகமான செலவாகும் சிகிச்சை இது.
தவிர நோயாளியின் உடலில் புதிதாக செலுத்தப்படுகின்ற மஜ்ஜை உண்டாக்கும் நோய் எதிர்ப்பு சக்தியானது, அவருடைய உடலின் நல்ல அணுக்களையேகூட தாக்கும். அதன் காரணமாக நோயாளி இறந்துபோகவும் வாய்ப்பு உண்டு.
இந்த இருவருக்குமேகூட புற்றுநோய் வந்ததால்தான் எலும்பு மஜ்ஜை மாற்றப்பட்டது.
எனவே ஹெச்.ஐ.வி.யை குணப்படுத்துவதற்கான சிகிச்சை என்பதைவிட உடலில் ஹெச்.ஐ.வி.யின் ஊற்றுக்கண்கள் சம்பந்தமான நமது புரிதலை மேம்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்பு என்றே இதனை நாம் கருதலாம்.

No comments:

கீல்வாதம் ( Gout )

  கீல்வாதம்  என்பது மூட்டுகளை (பொதுவாக முழங்கால்கள், இடுப்பு, கைகள்) தாக்கும் நோயாகும். மூட்டு அதன் குருத்தெலும்பை இழக்கும் போது, எலும்பானது...