சிறுநீர்பையில் தோன்றும் புற்றுநோயை அதன் வாசனையை வைத்து கண்டுபிடிக்கும் புதிய கருவி ஒன்றை லிவர்பூல் பல்கலைக்கழக பேராசிரியர்கள் வடிவமைத்திருக்கிறார்கள். லிவர்பூல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் கிறிஸ் புரோபர்ட் மற்றும் நார்மன் ரெட்கிளிப் ஆகிய இரண்டு பேர் கண்டுபிடித்திருக்கும் உபகரணமானது, சிறுநீர்பை புற்றுநோய் தாக்கியிருப்பவர்களின் சிறுநீரின் வாசனையை வைத்து ஒருவருக்கு புற்றுநோய் தாக்கியிருக்கிறதா இல்லையா என்பதை துல்லியமாக கண்டறிவதாக தெரிவித்திருக்கிறார்கள்.
சிறுநீர்பை புற்றுநோய் தாக்கிய செல்களில் இருந்து வெளியேறும் ஒருவித வாயுக்கள் சிறுநீரின் வாசனையில் கலந்து வெளியேறும்போது அதை இந்த குறிப்பிட்ட உணர்கருவி அடையாளம் கண்டு சொல்கிறது. இதற்கு முன்பு நாய்களுக்கு புற்றுநோய் செல்களின் வாசனையை நுகர்ந்து உணரும் தன்மை உண்டு என்பது சில சோதனைகளில் கண்டறியப்பட்டிருந்த பின்னணியில் இவர்களின் இந்த புதிய உபகரணம் சிறுநீர்பை புற்றுநோய் தடுப்பில் முக்கிய பங்காற்றும் என்று இதன் கண்டுபிடிப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறாரகள்.
சிறுநீரை சூடுபடுத்தும்போது வெளியேறும் ஆவிக்கு அருகே இந்த உபகரணத்தை கொண்டுசென்றால் அந்த வாசனையை வைத்து அந்த சிறுநீருக்கு உரியவருக்கு சிறுநீர்பை புற்றுநோய் தாக்கியிருக்கிறதா இல்லையா என்பதை கண்டறிந்து தெரிவிக்கும்.
இந்த புதிய உபகரணத்தை பயன்படுத்தி 98 பேரின் சிறுநீரை பரிசோதித்ததில், 96 சதவீதம் சரியாக புற்றுநோயை இவர்களால் கண்டுபிடிக்க முடிந்திருக்கிறது. அதேசமயம் இந்த உபகரணத்தை பயன்படுத்தி மேலதிகமானவர்களிடம் பரிசோதனை செய்தால் தான் இதன் நம்பகத்தன்மையை முழுமையாக பரிசோதிக்க முடியும் என்கிறார் பேராசிரியர் புரோபர்ட். குறிப்பாக இதுவரை இவர்கள் செய்திருக்கும் பரிசோதனைகள் எல்லாம் ஆண்களின் சிறுநீரை பயன்படுத்தி மட்டுமே செய்யப்பட்டிருக்கின்றன. எனவே ஆண் பெண் இருபாலாரிடமும் ஆயிரக்கணக்கில் பரிசோதனைகள் செய்தபிறகே இந்த உபகரணம் சாதாரண பொதுமக்களின் பாவனைக்கு வரும் என்றும் அவர் கூறினார்.
உலக அளவில் பல லட்சம்பேரை பாதிக்கும் சிறுநீர்ப்பை புற்றுநோயை ஆரம்பகட்டத்தில் கண்டறிய முடிந்தால் அதை முழுமையாக குணப்படுத்த முடியும். ஆனால் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த நோயின் ஆரம்பகட்டத்தில் மருத்துவ உதவியை நாடுவதில்லை. காரணம் இதன் பாதிப்பு அவர்களுக்கு துவக்கநிலையில் தெரிவதில்லை. எனவே இந்த புதிய உபகரணம் ஆரம்பகட்ட நிலையிலேயே சிறுநீர்பை புற்றுநோயை கண்டுபிடிக்கவல்லது என்பதாலும், சிறுநீர் பரிசோதனையைப் போல அதிக செலவில்லாத, உடலுக்குள் ஊடுறுவிச் செல்லவேண்டிய தேவையுமில்லாத ஒரு சிகிச்சைமுறையாக இது இருப்பதால் பரவலாக அனைவர்க்கும் இது பயன்படும் என்றும் இதை கண்டுபிடித்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.
No comments:
Post a Comment