Saturday, March 8, 2014

வலிப்பு நோய்: தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்(Epilepsy)

வலிப்பு நோய்: தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்

மனிதர்களிடம் தொன்று தொட்டே இருந்து வருகிறது. முன்பு இதற்கு திட்ட வட்டமான மருந்தோ, சிகிச்சை முறையோ இருக்கவில்லை. அதனால் வலிப்பு நோய் என்றாலே மக்கள் பயந்தனர். இன்றைய நிலை அதுவல்ல. இதர நோய்களைப் போல் வலிப்பு நோய்க்கும் மருந்தும், சிகிச்சைகளும் இருக்கின்றன. அதுபற்றி தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்து விஷயங்களும் இங்கே தொகுத்து தரப்படுகின்றன. 

“வலிப்பு நோய் மூளையில் உண்டாகும் ஒருவகை எரிச்சலால் ஏற்படுகிறது. பிறவியிலேயே மூளையில் ஏற்படும் ஒரு கோளாறு, மூளைக்காய்ச்சல், மூளைக்கட்டி, தலையில் அடிபட்டதால் பின்பு மூளையில் ஏற்படும் ரத்தக் கசிவு போன்ற பல காரணங்களால் வலிப்பு ஏற்படுகிறது. பேய், பிசாசு போன்ற எந்த தாக்கங்களாலும் வலிப்பு நோய் ஏற்படுவதில்லை. 

வலிப்பு நோயில் பெருவலிப்பு, சிறுவலிப்பு, சைக்கோ மோட்டார் வலிப்பு ஆகிய மூன்று வகைகள் உள்ளன. பெருவலிப்பின்போது பாதிக்கப்பட்டவர் நினைவிழந்து கீழே விழுந்துவிடுவார். கை, கால்கள் சுண்டி இழுத்து துடிக்கும். சற்று நேரம் வரை அவர் நினைவிழப்பால் பாதிக்கப்படலாம். சிறுவலிப்பு என்றால், கண நேரமே நினைவிழப்பு ஏற்படும். 

தசைகளில் துடிப்பு ஏற்படலாம். சைக்கோ மோட்டார் வலிப்பு ஏற்படும் போது சிறிது நேரம் அவர் செயல்பாடு வழக்கத்திற்கு மாறானதாய் இருக்கும். நோக்கம் எதுவுமின்றி சுற்றிக் கொண்டிருப்பார். சப்புக் கொட்டுவார். வெறும் வாயில் ஏதோ விழுங்குவது போல் நடந்து கொள்வார். துணிமணிகளை தேடித் தருமாறு சொல்வார். ஏதேதோ சம்பந்தமில்லாமல் பேசுவார். 

இவை சுயநினைவற்ற நிலையில் நடக்கும். சுயநினைவு வந்த பிறகு, முன்பு நடந்த எதுவும் அவரது நினைவுக்கு வராது. வலிப்பு நோயால் பாதிக்கப்படுகிறவருக்கு என்ன முதலுதவி செய்ய வேண்டும்? வலிப்பு நோயை முதலில் பார்க்கும்போது, பயமும் பீதியும் உண்டாகும். 

எவராவது வலிப்பு நோயால் துடிக்கும்போது, ஓர் இரும்புத் துண்டைக் கொடுத்தால் வலிப்பு நின்றுவிடும் என்று நம்புகிறோம். அது உண்மை அல்ல. வலிப்பு தானாகவே நிற்கிறது. வலிப்பால் துடிப்பவரை, மெதுவாய் ஒருக்களித்து எச்சில் சரளமாய் ஒழுக வசதியாய்ப் படுக்க வைக்க வேண்டும். இதனால் நோயாளியின் தொண்டை அடைக்காது. 

பிறகு கைக்குட்டையையோ, துண்டு துணியையோ பந்து போல சுற்றி பற்களுக்கிடையே வைக்க வேண்டும். நாக்கையோ, உதடுகளையோ கடித்துக் கொள்ளாமலிருக்க இது உதவும். வலிப்பு வந்தவரை எழுப்ப முகத்தில் தண்ணீர் அடிக்கக்கூடாது. சுயநினைவு இழந்த நிலையிலிருக்கும் போது அவருக்கு குடிக்க எதுவும் கொடுக்கக்கூடாது. 

நடுக்கம் நின்ற பிறகு அவர் தானாகவே எழுந்திருக்க விட்டுவிட வேண்டும். அதன் பின்னர் அவரை நரம்பியல் நிபுணரிடம் அழைத்துச் சென்று ஆலோசனை பெறவேண்டும். வலிப்பு நோயாளிக்கும், மற்றவர்களுக்கும் வேறுபாடு உண்டா? இல்லை. வலிப்பு நோயாளிகளின் உடலும், உள்ளமும் மற்றவர்கள் போலவே சுறுசுறுப்பாய் இயங்கும். 

அவர்களால் நன்றாய் படிக்க முடியும். விளையாட முடியும். வேலை செய்ய முடியும். சமூக வாழ்க்கையில் கலந்து பழகும் தகுதியும், திறனும் அவர்களுக்கும் மற்றவர்களைப் போலவே உண்டு. வலிப்பு நோய் வந்த குழந்தைகள் பள்ளிக்கு போகலாமா? போகலாம். ஆனால் பள்ளியில் சேர்த்தவுடன் ஆசிரியரிடம் குழந்தையின் வலிப்பு நோய் பற்றி சொல்லிவிட வேண்டும். 

இது அந்தக் குழந்தையிடம் தனிக்கவனம் செலுத்துவதற்கும், மற்ற குழந்தைகள் வலிப்பு நோய் தொற்று நோய் அல்ல என்று தெளிவு பெறுவதற்கும் உதவும். இதனால் மற்றக் குழந்தைகள் வலிப்பு நோயுள்ள குழந்தையைக் கண்டு பயம் கொள்வதற்கு பதில் அன்பும், அனுதாபமும் காட்டத் தொடங்குவார்கள். 

வலிப்பு நோயாளி திருமணம் செய்து கொள்ளலாமா? உடல் நடுக்கம் நன்றாய் கட்டுப்படுத்தப்பட்டு, மருந்தும் ஒழுங்காய் சாப்பிட்டு வந்தால் திருமணம் செய்துகொள்ள தடையில்லை. வலிப்பு நோயாளியின் குழந்தைகளுக்கு வலிப்பு நோய் தோன்றுமா? பெற்றோரில் ஒருவர் வலிப்பு நோயாளியாய் இருந்தால் பிறக்கும் குழந்தைக்கும் நோய் வருவது என்பது அரிதாகும். 

ஆனால் பெற்றோர் இருவருமே வலிப்பு நோயாளியாயிருந்தால் பிறக்கும் குழந்தைக்கும் அந்த நோய் வர வாய்ப்புண்டு. அதனால் அவர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆலோசனையை டாக்டர்கள் வழங்குகிறார்கள். கார் ஓட்டலாமா ? தவறாமல் மருந்து சாப்பிட்டு தொடர்ந்து 3 மாதங்களுக்கு வலிப்பு வராதிருந்தால் கார் ஓட்டலாம். 

ஆனால் இரவு நேரங்களில் கார் ஓட்டுவதை தவிர்த்து விட வேண்டும். வலிப்பு நோயாளிகள் தொலைக்காட்சி பார்க்கலாமா? ஒரு சிலருக்கு தொலைக்காட்சி பார்க்கும் போது வலிப்பு வரும். அப்படிப்பட்டவர்கள் டி.வி. நிகழ்ச்சிகள் பார்ப்பதை தவிர்த்துவிட வேண்டும். இதர வலிப்பு நோயாளிகள் டி.வி. பார்க்கலாம். அவர்கள் தொடர்ச்சியாக தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்க்க வேண்டும். 

தொலைக்காட்சி பெட்டியின் அருகாமையில் அமர்ந்தும் பார்க்கக் கூடாது. கர்ப்பமடையும் வலிப்பு நோயாளி, வலிப்பு நோய் மருந்துகளை சாப்பிடலாமா? கர்ப்பிணிப் பெண்ணுக்கு வலிப்பு வந்தால்தான் குழந்தைக்கு அதிகமாக பாதிப்பு ஏற்படும். எனவே, மருந்து சாப்பிடுவதை நிறுத்தக்கூடாது. கர்ப்பமானதும் டாக்டரிடம் தகுந்த ஆலோசனையை பெறவேண்டும். 

வலிப்பு நோயாளி எத்தனை வருடங்கள் தொடர்ச்சியாக மருந்து ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாக மருந்து மாத்திரைகள் சாப்பிட வேண்டும். தொடர்ந்து ஐந்து வருடங்கள் வலிப்பு இல்லாமல் இருந்தால் நரம்பியல் நிபுணரின் ஆலோசனையின்படி படிப்படியாக மருந்துகளை குறைத்துக் கொள்ளலாம். திடீரென மருந்துகளை நிறுத்தக் கூடாது. 

அப்படி நிறுத்தினால் வலிப்பின் தன்மை அதி கமாகி தொடர்ச்சியாக வலிப்பு வரும். பின்பு வலிப்பு நோயை கட்டுப்படுத்துவது சிரமம். வலிப்பு நோயாளிகள் என்னவெல்லாம் சாப்பிடலாம்? எல்லா வகையான உணவுகளையும் சாப்பிடலாம். ஆனால் அது சமச்சீர் சத்துக்களை கொண்டதாக இருக்கவேண்டும். 

முக்கியமாக சரியான சமயத்தில் சாப்பிட வேண்டும். காலை சிற்றுண்டி 8 மணிக்கு, மதிய உணவு 1 மணிக்கு, மாலை டிபன் 5 மணிக்கு, இரவு சாப்பாடு 8 மணிக்கு என்று வகைப்படுத்திக்கொள்ள வேண்டும். ஒரு வேளை சரியாக சாப்பிடாமல் இருந்தாலோ, குறைவாக சாப்பிட்டாலோ, ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து விடும். 

அதனால் வலிப்பு வரலாம். அறுவை சிகிச்சை செய்து வலிப்பு நோயை குணமாக்க முடியுமா ? மூளையில் பெரிய அளவில் காசநோய் கட்டி அல்லது பூச்சி கட்டி ஆகியவற்றினால் வலிப்பு நோய் இருந்தால் அறுவை சிகிச்சை செய்து அக்கட்டியை அகற்றுவதினால் வலிப்பு நோயை கட்டுப்படுத்த முடியும். 

மூளையில் புற்றுநோய் ஏற்பட்டு வலிப்பு நோய் ஏற்பட்டால், புற்று நோய் கட்டியை அறுவை சிகிச்சை செய்து வலிப்பு நோயை கட்டுப்படுத்தலாம். வலிப்பு நோய் உள்ளவர்களில் பெரும் பாலானவர்களுக்கு நோயின் காரணத்தை அறிய அதிநவீன கருவிகள் மூலம் பரிசோதனை செய்த பின்பும் சில சமயம் வலிப்பு நோயின் காரணத்தை அறிய முடியாது. 

அவர்கள் மருந்து, மாத்திரை சாப்பிட்டு நோயை கட்டுப்படுத்தவேண்டும். வலிப்பு நோயாளிகள் முக்கியமாக கவனத்தில் வைக்க வேண்டியவை? மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை தவறாமல் சாப்பிட வேண்டும். மதுபானம் சாப்பிடக்கூடாது. 

போதுமான அளவு தூங்க வேண்டும். பட்டினி கிடக்கக் கூடாது. குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடவேண்டும். உணர்ச்சி வசப்படும் சந்தர்ப்பங்களை தவிர்த்து விட வேண்டும்

No comments:

கீல்வாதம் ( Gout )

  கீல்வாதம்  என்பது மூட்டுகளை (பொதுவாக முழங்கால்கள், இடுப்பு, கைகள்) தாக்கும் நோயாகும். மூட்டு அதன் குருத்தெலும்பை இழக்கும் போது, எலும்பானது...