Friday, March 7, 2014

மனதைக் கட்டுப்படுத்த வேண்டுமா.......?


                   

ன் மனம் தேவையில்லாததை எல்லாம் நினைக்கிறது. என் மனதை நான் எப்படிக் கட்டுப்படுத்துவது? தியானம் பழக வேண்டுமென்றால் மனதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்கிறார்களே..?

முதலில் உங்கள் மனதை ஏன் கட்டுப்படுத்த முயற்சிக்கிறீர்கள்? கெட்ட விஷயங்களை நினைக்கக் கூடாது, மனதைக் கட்டுப்படுத்த பழக வேண்டும் என்றெல்லாம் ஆன்மீகவாதிகள் ‌என்று சொல்லப்படுபவர்கள் சொல்லி வந்திருக்கிறார்கள்.

 ஆனால் அப்படி முயற்சிக்கும் போதெல்லாம் மனம் அந்த விஷயங்களைத்தான் முழு நேரமும் நினைக்க ஆரம்பிக்கும். உங்கள் மனதின் செயலைப் பொறுத்தவரையில் வகுத்தல், கழித்தல் எல்லாம் கிடையாது. அங்கே கூட்டல், பெருக்கல் மட்டும்தான். உங்கள் மனதிலிருந்து அதிரடியாக ஓர் எண்ணத்தையாவது உங்களால் நீக்க முடியுமா? 

முடியவே முடியாது. இல்லையா? ஏதாவது ஒன்றைக் குறித்து இன்று நினைக்கக் கூடாது என்று நீங்கள் முடிவு செய்தால் அன்று முழுவதும் அதைப் பற்றியேதான் நினைப்பீர்கள். மனதின் அடிப்படைத் தன்மைகளைப் புரிந்து கொள்ளாமல் இப்படித்தான் தவறாக முயறசித்துக் கொண்டு இருக்கிறோம்.

தியானம் செய்யும் போது என் இதயம் துடிப்பதை நிறுத்த வேண்டும் என்று எப்போதாவது எண்ணுகிறீர்களா? என் சிறுநீரகம் தன் செயலை நிறுத்த வேண்டும் என எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா? கிடையாது. அவை தத்தம் செயலைத் தொடர்ந்து நடத்த அனுமதித்தீர்கள் தானே? பிறக மனமும் தனது வேலையைச் செய்ய நீங்கள் ஏன் அனுமதிக்கக் கூடாது? உங்களால் எப்போதும் மனதைக் கட்டுப்படுத்த முடியாது. இதுவரை யாராவது தன் மனதைக் கட்டுப்படத்தி இருக்கிறார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா? யாரும் அப்படிச் செய்ததில்லை. அப்படிச் செய்யவும் முடியாது.

இந்த மனம் ஒரு புழுவிலிருந்து, ஒரு பூச்சியிலிருந்து, ஒரு குரங்கிலிருந்து தற்போது மனிதன் வரை இத்தகைய பரிணாம வளர்ச்சி அடைய லட்சக்கணக்கான வருடங்கள் எடுத்திருக்கிறது. இவ்வளவு மகத்தான முயற்சிக்குப் பின் இத்தகைய மனம் .உங்களுக்குக் கிடைத்திருக்கும் போது அதைக் கட்டுப்படுத்த ஏன் முயற்சிக்கிறீர்கள்? 

அது முழுத் தீவிரத்துடன் இருக்க வேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன். ஆனால் அற்புதமாக இருக்க வேண்டிய மனம் தற்போது உங்களுக்குத் துன்பத்தை உற்பத்தி செய்கிற இயந்திரமாக மாறிவிட்டத.

உங்களின் எல்லாத் துன்பங்களும் உங்கள் மனதில்தானே உற்பத்தியாகின்றன? மனதை எப்படி இயக்குவது என்று உங்களுக்குத் தெரியாததால்தான் அங்கிருந்து துன்பங்கள் உற்பத்தியாகின்றன. 
இதே மனதை வைத்து ஆனந்தம் எப்படி உற்பத்தி செய்வது என்று தெரிந்து விட்டால் பிறகு மனதைக் கட்டுப்படுத்த எண்ணுவீர்களா? ஒருபோதும் மாட்டீர்கள்! எனவே உங்கள் மனதை எப்படிச் சரியாக இயக்க வேண்டும் என்பதைத்தான் கற்றுக் கொள்ள வேண்டும்.

உங்கள் மனதைக் கட்டுப்படுத்தத் தேவை இல்லை. சில எளிமையான பயிற்சிகள் உள்ளன. அவற்றைக கடைப்பிடித்தால் உங்களுக்கும் உங்கள் மனதுக்கும் சிறிய இடைவெளி இருக்கும். அந்த இடைவெளியை நீங்கள் உருவாக்கி விட்டால் பிறகு உங்கள் துன்பங்கள் அனைத்தும் நிரந்தரமாக முடிவுக்கு வந்து விடும்.

No comments:

கீல்வாதம் ( Gout )

  கீல்வாதம்  என்பது மூட்டுகளை (பொதுவாக முழங்கால்கள், இடுப்பு, கைகள்) தாக்கும் நோயாகும். மூட்டு அதன் குருத்தெலும்பை இழக்கும் போது, எலும்பானது...